
தமிழகம், பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காவல்துறையில் அதிக காலியிடங்கள் இருப்பது குறித்து விளக்கம் அளிக்க வலியுறுத்தி உள்துறை செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
5.42 லட்சம் பணியிடங்கள்
நாடு முழுவதும் காவல்துறையில் 5.42 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தமிழ்நாடு, பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் போலீஸ் காலியிடங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் 1.5 லட்சம் காலியிடங்களும், பீகாரில் 40 ஆயிரம் காலியிடங்களும் உள்ளன.
சட்டம் ஒழுங்கு பாதிப்பு
நாடு முழுவதும் போலீஸ் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ளதால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மணிஷ் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான நீதிபதிகள் சந்திராசூட், எஸ்.கே. கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
21-ந்தேதிக்குள்
இந்த நிலையில் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளது குறித்து தமிழ்நாடு, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வரும் 21-ந்தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளார்கள். இதேபோன்று, காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் உள்துறை செயலர்கள் விளக்கம் அளிக்க கோரப்பட்டுள்ளனர்.