
யூனியன் பிரதேசமான தத்ரா மற்றும் நகர் ஹவேலியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு நில உரிமை வழங்காமல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏமாற்றி, தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
யூனியன் பிரதேசமான தத்ரா மற்றும் நகர் ஹாவேலிக்கு பிரதமர் மோடி நேற்றுச் சென்றார். கடந்த 35 ஆண்டுகளில் பிரதமர் ஒருவர் தாதர் நாகர்ஹாவேலிக்கு சென்றது இது முதல்முறையாகும்.
சில்வாஸா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் முன், பிரதமர் மோடி, பழங்குடியின பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர், அடுப்புகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகள், பழங்குடியின மக்களுக்கு நில உரிமைகளை வழங்கினார்.
அதன்பின் அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது-
இதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு நில உரிமையை வழங்காமல், மாநிலங்களையே குறை சொல்லிக்கொண்டு இருந்தது.
குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நில உரிமையை வழங்கிவிட்டன. ஆனால், அப்போது இருந்த மத்திய அரசும், காங்கிரஸ் தலைவர்களும் நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, நான் பழங்குடியின மக்களுக்கு நில உரிமை வழங்கவில்லை என குற்றம்சாட்டினர்.
ஆனால், நான் பிரதமராக பதவி ஏற்றவுடன், இந்த கடமையை உணர்ந்து, மாநிலங்களின் கையில் இந்த பொறுப்பை ஒப்படைக்க கூடாது, மத்திய அரசு இந்த உரிமையை வழங்க வேண்டும் என முடிவு செய்தேன். அதனால், காங்கிரஸ் ஆட்சியில் வழங்காத நில உரிமையை, நான் நேரடி கட்டுப்பாட்டில் எடுத்து வழங்கி வருகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களில் ஒருவருக்கு கூட நில உரிமை வழங்காமல் அதை கிடப்பில் போட்டு, மாநிலங்களை குறை கூறியது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழங்குடியின மக்களுக்கு நில உரிமை வழங்க முடிவு செய்தோம். இந்த மண்ணின் மைந்தர்களாக இருந்தும், அவர்களுக்கு நில உரிமை இல்லை. இப்போது, 2,325 குடும்பங்களுக்கு நில உரிமையை முதல்முறையாக வழங்கி இருக்கிறோம்.
தத்ரா மற்றும் நகர் ஹவேலியில் நடத்திய ஆய்வில், 6,234 பேருக்கு சொந்தமாக வீடு இல்லை, சில்வாஸா நகரில் 800 குடும்பங்களுக்கு வீடு இல்லை என்பதை அறிந்தோம். இவர்களுக்கு 2022ம் ஆண்டுக்குள் சொந்தமாக வீடு வழங்கப்படும்.
2014 பொதுத்தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி இலவச கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கையை ஒன்பதில் இருந்து 12 ஆக உயர்த்தினார்கள். ஆனால், நாங்கள் 2 கோடி குடும்பங்களுக்கு நாங்கள் கியாஸ் இணைப்பு வழங்கி இருக்கிறோம்.
இங்குள்ள மக்களுக்கு விலை குறைவாகவும், தரம் மிகுதியாகவும், மருந்துகள் கிடைக்க நாங்கள் வசதிகளை உருவாக்கி இருக்கிறோம். அரசு வழங்கும் மருந்துகள், தரம் குறைவானவை என்ற பிரசாரத்தை புறந்தள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.