ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்

By SG BalanFirst Published Jul 19, 2023, 7:08 PM IST
Highlights

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தை இயற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என மத்திய அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன. ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, மணிசங்கர், சதீஷ் பராசரன் ஆகியோர், தமிழக அரசு சட்டத்தில் உள்ள நெறிமுறைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்றும் அதற்கு போட்டியாக தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது என்றும் வாதிட்டனர்.

உம்மன் சாண்டியின் கடைசி ஆசை... மனைவி சொன்னதை அப்படியே நிறைவேற்றிய கேரள அரசு!

ஆன்லைன் விளையாட்டுகள் ஏராளமான கட்டுப்பாடுகளுடன் தான் அனுமதிக்கப்படுகின்றன; தென் மாநிலங்களில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை கூடியிருப்பதைக் காட்டும் எந்த புள்ளிவிவரமும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். தமிழக அரசுக்கு அறிக்கை அளித்த நீதிபதி சந்துரு ஆன்லைன் கேமிங் நிறுவனங்களிடம் கருத்து கேட்கவில்லை என்றும் அவர்களிடம் முறையான விசாரணை நடத்தாதது ஒருதலைபட்சமானது என்றும் கூறினர்.

ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் அவற்றுக்கு உரிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றன எனவும் திறமை சார்ந்த விளையாட்டான ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் கொண்டுவரும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் எடுத்துரைத்தனர். ஆன்லைன் ரம்மியில் ஏற்கெனவே மோசடிக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவுக்கு நடைமுறையில் உள்ளதாகவும் கூறினர்.

நீதிபதி சந்துரு குழு, தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதங்களை முன்வைத்தார். அப்போது, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாகவும், அந்தச் சட்டத்தின்படி, ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்படும் எனவும் உறுதி கூறினார். இந்நிலையில்,  ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றுவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

வாதங்களைக் கேட்ட உயர் நீதிமன்றம் தமிழக அரசின் தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்கும் வகையில், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

வரி ஏய்ப்பு புகார்... கோவை தங்க கட்டி வியாபாரி சீனிவாசன் வீட்டில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை

click me!