
பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்கள் நிகழ உள்ளன. அதில் முதன்மையானது ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி. ஜவுளி பொருட்களின் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியானது ஏற்கெனவே 5 சதவீதமாக இருந்தது. தற்போது நிகழவிருக்கும் மாற்றத்தின்படி 7 சதவீதம் அதிகரித்து 12 சதவீதமாக உயரவுள்ளது. இதனை ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்தாண்டு முதல் இது நடைமுறைக்கு வரவிருப்பதால், துணிகளின் விலை தாறுமாறாக உயர அதிக வாய்ப்பு உள்ளது. கைத்தறி சங்கங்கள், நெசவாளர்கள், முதலீட்டாளர்கள் என ஜவுளி துறையில் இருக்கும் அனைவரையும் இந்த அறிவிப்பு கலக்கமடைய செய்துள்ளது. ஏற்கெனவே 5 சதவீத ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் ஜவுளி துறை நலிந்துபோனது. போதாக்குறைக்கு கொரோனா பரவல் வேறு கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறது.
இதன் காரணமாக நிறைய துணிகள் அப்படியே தேங்கி போயுள்ளன. வெளிநாட்டுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை. இவ்வாறு பல்வேறு அழுத்தங்களால் ஜவுளி துறை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருப்பூர் தான் பின்னலாடை துறையில் ஈடுபடுவோரும் முதலீட்டாளர்களும் அதிகம். இந்தியாவில் அதிகமான பின்னலாடைகளை உற்பத்தி செய்யும் நகரம் என்ற பெருமை திருப்பூரையே சாரும். ஆனால் அந்த நகரம் கொஞ்சம் கொஞ்சம் இருளுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆர்டர்கள் கட் ஆனதால் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்துகின்றன. திருப்பூர் சென்றால் வேலை கிடைக்கும் என்ற நிலை போய், திருப்பூர் மைந்தர்களே வேறு நகரங்களுக்கு வேலையை தேடி செல்கிறார்கள். இவ்வாறு பல்வேறு இன்னல்களை தாங்கி கொண்டிருக்கும் திருப்பூர் ஜவுளி துறைக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு பேரிடியை இறக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். பட்டுப்புடவைகளுக்கு பெயர்போன காஞ்சிபுரமும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த வரி உயர்வால் சாதாரண பட்டு புடவை கூட 3,000 ரூபாய் உயரக் கூடும் என சொல்லப்படுகிறது. மக்களிடையே பணப்புழக்கம் முற்றிலும் மங்கிப்போன இந்தக் காலக்கட்டத்தில் எப்படி புடவைகளையும் துணிகளையும் அதிக விலைக்கு விற்பனையாகும் என்ற கேள்வி எழுகிறது. கைவினை பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு இருப்பது போல் கைத்தறியில் நெய்யப்படும் பட்டுச் சேலைகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் பொருட்களுக்கான வரி விகிதத்தில் மாற்றம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிப்பதற்காக ஜி.எஸ்.டி கவுன்சிலிங் 46 வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.