
ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்ட 39 இந்தியர்களை தேடும் பணியை கைவிடவில்லை என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாநிலங்களவையில் அறிவித்தார்.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா? என்பது குறித்த உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று, நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் கூறி இருந்தார்.
அப்படி உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக கூறுவது பெரிய பாவம் என்றும் அதை செய்ய மாட்டேன் என்றும் அவர் விளக்கம் அளித்து இருந்தார். நேற்று மாநிலங்களவையிலும் இந்த விளக்கத்தை மீண்டும் அவர் கொடுத்தார். சுஷ்மா மேலும் கூறியதாவது-
‘‘இந்த விவகாரத்தில் நான் தவறான தகவல்களை கூறவில்லை. நாங்கள் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை. நமக்கு உதவத் தயாராக உள்ள நாடுகளிடம் உதவி கோரி இருக்கிறோம். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய ஹர்ஜித் மசிக் என்பவர் 39 இந்தியர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாக கூறியதாக சொல்கிறீர்கள்.
நான் அவரிடம் பேசும்போது, அவர் எப்படி தப்பி வந்தார் என்பது குறித்து நம்பும்படியான பதில் எதையும் சொல்லவில்லை. கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடத்தல்காரர்களிடம் இருந்த வந்த போனில், கடத்தப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
கைவிடவில்லை
காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்சினையை அரசியல் ஆக்கப் பார்க்கிறது. தகவலுக்கும் ஆதாரத்துக்கும் வேறுபாடு உள்ளது. கடத்தப்பட்டவர்கள் குறித்து உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், அவர்களை தேடும் பணியை நாங்கள் கைவிடவில்லை’’..
அவர் மேலும் கூறும்போது சில தகவல்களின் அடிப்படையில் 39 இந்தியர்களும் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர், அந்த தகவல் பற்றி மேலும் விரிவாக கூற முடியாது என்றும், அது ‘ராஜதந்திர ரகசியம்’‘ என்றும் குறிப்பிட்டார்