சீனியர்களை ஓரம் கட்டும் மோடி! தமிழக பி.ஜே.பி.யில் யூத் கிளப்பும் தகராறு!

By vinoth kumarFirst Published Nov 21, 2018, 3:59 PM IST
Highlights

பி.ஜே.பி.யின் சீனியர் தலைவர்களில் முக்கியமானவர் சுஷ்மா சுவராஜ். வாஜ்பாய் காலத்தில் பி.ஜே.பி.யின் தேசிய அரசியலில் உச்ச நிலைக்கு போனவர் அதன் பின் இன்று வரை அந்த ஹீட்டை மெயிண்டெயின் செய்தபடியேதான் உள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில் இளைஞர்களின் வாக்கு வங்கியை பெரிதும் நம்பியே களமிறங்கியது பி.ஜே.பி.! டிஜிட்டல் பிரச்சாரம், நவீன இந்தியா, தூய்மை தேசம்! என்று அவர்களை கவர்வது போலவே தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிட்டனர், அதற்கு பலனும் கிடைத்தது. முரட்டு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்தது பி.ஜே.பி. சரி, இந்த நான்கரை ஆண்டுகளில், பி.ஜே.பி. அரசானது, இளைஞர்களுக்கு செய்தது என்னென்ன? என்று நீங்கள் கேள்வி கேட்பீர்களானால்....’பாஸ்’ என்று அடுத்த கேள்விக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. 

அது ஒரு பக்கம் கிடக்கட்டும். ஆனால் இப்போது பிரச்னை அது இல்லை. விவகாரமே வேறு.... பி.ஜே.பி.யின் சீனியர் தலைவர்களில் முக்கியமானவர் சுஷ்மா சுவராஜ். வாஜ்பாய் காலத்தில் பி.ஜே.பி.யின் தேசிய அரசியலில் உச்ச நிலைக்கு போனவர் அதன் பின் இன்று வரை அந்த ஹீட்டை மெயிண்டெயின் செய்தபடியேதான் உள்ளார். தற்போது வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் அவர் நேற்று மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நிருபர்களிடம் “அடுத்த லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன். 

கட்சி தலைமையிடமும் இதை தெரிவித்துவிட்டேன். எனினும் இது பற்றி கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.” என்று தடாலடியாக ஒரு கருத்தை தெரிவித்தார். சுஷ்மாவின் இந்த சுரீர் முடிவு தேசிய அளவில் அரசியலரங்கில் டிரெண்டிங் ஆனது. அதிலும் பி.ஜே.பி.க்குள் பெரிய விவாதத்தையே கிளப்பியது. ‘சுஷ்மாவுக்கு உடல் நலன் ஒத்துழைப்பதில்லை. இதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளார்.’ என்றனர் சிலர். சிலரோ ‘இது பக்கா ஸ்டண்ட்’ என்றனர்.

ஆனால் சுஷ்மா இப்படி பேட்டி தட்டிய பின் தமிழக பி.ஜே.பி.யினுள்ளும் இது ஒரு புகைச்சலை கிளப்பியுள்ளது. அதாவது தமிழக பி.ஜே.பி.யை சேர்ந்த இளம் நிர்வாகிகள்.... “உடல்நிலை பிரச்னையாக இருந்தாலுமே கூட சுஷ்மா எடுத்திருக்கும் முடிவு அதிரடியானது. ஒருவேளை அவர் ஸ்டண்ட் அடிக்க நினைத்திருந்தாலுமே கூட, அவரது கோரிக்கையை ஏற்று ஒரு வேளை தலைமை அவருக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் அதன்பின் ரெகுலர் அரசியலில் இருந்து சுஷ்மா விலகித்தான் நிற்கணும். எப்படி பார்த்தாலும் இது சுஷ்மாவின் துணிச்சல் முடிவு. 

இதே போன்று தமிழக பி.ஜே.பி.யின் உச்சத்தில் இருக்கும் நிர்வாகிகள் தேர்தல் அரசியலில் இருந்து விலக வேண்டும். எம்.பி., வாரிய தலைவர், ராஜ்யசபா எம்.பி., கவர்னர் என்றெல்லாம் பதவிகளை அனுபவித்துக் கொண்டும், அனுபவித்துவிட்டும் இருக்கும் நீங்கள் இனியாவது இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். இது இளைஞர்களின் தேசம்! இது இளைஞர்களுக்கான மண்! என்று பிரதமர் நமோ, போகுமிடமெல்லாம் இந்தியாவை சுட்டிக்காட்டுகிறார். 

ஆனால அவரது கட்சியிலேயே பென்ஷன் வாங்கும் வயதை தொட்டுவிட்ட நபர்கள் இன்னமும் தேர்தலுக்கு டிக்கெட் கேட்டு நிற்பது நியாயமில்லை. அதனால் சீட் வேண்டாம்! என்று அறிவித்து இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஏற்கனவே இந்த முறை பெரும் அதிருப்திக்கு நடுவில்தான் களமிறங்குகிறோம். சர்வேக்கள் நமக்கு சந்தோஷத்தை தந்திராத நிலையில், நம் கட்சியால் இங்கே காட்டிடக்கூடிய ஒரே மாற்றமானது தேர்தலில் புது முகங்களுக்கு அதுவும் சாதித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதுதான். 

எனவே எங்களுக்கு வழிவிட்டு விலகி நில்லுங்கள். உங்களை அரசியலை விட்டே விலக சொல்லவில்லை! தேர்தலில் சீட் கேட்பதை தவிர்த்துவிட்டு, எங்களுக்கு பின்னால் நின்று உங்களின் அரசியல் சாணக்கியத்தனத்தை கட்சியின் வெற்றிக்கு அர்ப்பணியுங்கள். இதை ஏற்காமல் ‘சுகர் மாத்திரியை போட்டுவிட்டு பிரசாரத்துக்கு போவதும்! பிரஷர் மாத்திரையோடு பிரசாரத்தை முடிப்பதுமாக’ இருக்கும் நபர்களான நீங்களே மீண்டும் வேட்பாளர்களானால் நம் கட்சியை அந்த நமோவால் கூட காப்பாற்ற முடியாது. இந்த தகவலை அப்படியே டெல்லிக்கும் பாஸ் செய்கிறோம்!” என்று பரபரவென டைப் செய்து அதை உட்கட்சிக்குள் வைரலகாக்கியுள்ளனராம். தமிழக பி.ஜே.பி.யின் உச்ச பதவியிலிருக்கும் சீனியர் நிர்வாகிகள் இதை வாசித்துவிட்டு பி.பி. எகிறியதால் எக்ஸ்ட்ரா மாத்திரை சாப்பிட்டு தங்களை ஆசுவாசப்படுத்தியபடி உள்ளனர்.

click me!