மதரஸா கல்வி வாரியச் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் தடை!

By Manikanda PrabuFirst Published Apr 5, 2024, 4:44 PM IST
Highlights

உத்தரப் பிரதேசத்தின் 'மதரஸா கல்வி வாரியச் சட்டம்' செல்லாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மதரஸா கல்வி சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்திருந்தது. மதரஸா கல்வி சட்டம் நாட்டின் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது எனவும் அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 5 பேர் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.யந்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் 'மதரஸா கல்வி வாரியச் சட்டம்' செல்லாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: பாஜக பிரமுகர் கைது!

மதரஸா சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், மதரஸா சட்டம் மதக்கல்வி கற்பிப்பது தொடர்பான எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை. மதரஸாக்களை ஒழுங்குப்படுத்துவதே மதரஸா கல்வி வாரியச் சட்டத்தின் நோக்கமாகும். மதரஸாக்களை ஒழுங்குபடுத்த உத்தரவு பிறப்பிக்கலாம். அதற்காக மதரஸாக்கள் சட்டத்தையே ரத்து செய்து செல்லாது என தீர்ப்பளிக்க முடியாது.  என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பால் மதரஸாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், மதரஸாவில் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கவேண்டும் என்றால் மதரஸா சட்டத்தை ரத்து செய்வது தீர்வாகாது என்றதுடன், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

click me!