கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகளை கொண்ட கேரள மாநிலத்துக்கு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத்தக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் தங்களது வேட்புமனுக்களை செய்து வருகின்றனர். அதில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரின் சொத்து மதிப்பு குறித்து வேட்புமனு சமர்ப்பின்போது, அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன்படி தனக்கு ரூ.55 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு இருப்பதாக சசி தரூர் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 2022-2023 நிதியாண்டில் மட்டும் அவரது மொத்த வருமானம் ரூ.4.32 கோடி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை குறிப்பிட்டுள்ள சசி தரூர், ரூ.49 கோடிக்கு மேல் அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதில், 19 வங்கிகளில் உள்ள டெபாசிட் தொகை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உள்ளிட்டவைகள் அடங்கும். அசையும் சொத்துக்களாக ரூ.32 லட்சம் மதிப்பிலான 534 கிராம் தங்கமும், கையில் ரூ.36,000 ரொக்கமும் பணமும் வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அசையா சொத்துக்களாக, பாலக்காட்டில் 2.51 ஏக்கர் விவசாய நிலம், தற்போது ரூ.6.20 கோடிக்கு மேல் மதிப்புள்ள திருவனந்தபுரத்தில் சுயமாக கையகப்படுத்திய 10.47 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் சசி தரூர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருக்கும் அவரது வீட்டின் மதிப்பு ரூ.52 லட்சம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னிடம் ஒரு மாருதி சியாஸ் மற்றும் ஒரு மாருதி எக்ஸ்எல் 6 என இரண்டு கார்கள் உள்ளதாகவும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டில் சசி தரூர் தன்னிடம் ரூ.23 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகவும், 2019ஆம் ஆண்டில் ரூ.35 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். அதனை ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.