தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பும் முடிவை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்த வழக்கை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.
"பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 145(4) பிரிவின்படி, இந்த விவகாரம் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும். அக்டோபர் 30ஆம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெற உதவும் தேர்தல் பத்திரங்கள் நிதிச் சட்டம், 2017 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன. ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் திருத்தி இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
2017 நிதிச் சட்டம், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தேர்தல் நிதி வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்களை வெளியிடும் முறையை அறிமுகப்படுத்தியது. நதி மசோதாவாகத்த தாக்கல் செய்யப்பட்டதால், ராஜ்யசபாவின் ஒப்புதல் தேவையில்லாமலே சட்டமாக நிறைவேறியது.
நிதிச் சட்டம், 2017 மூலம் அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற, தடையில்லா நன்கொடை வழங்குதற்கான வாயிலைத் திறந்துவிட்டிருப்பதாக, இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டன. இந்த நிதிச் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்ற முடியாது என்றும் மனுக்களில் கூறப்பட்டுள்ளன.
இந்தச் சட்டத்தைத் தடை செய்யக் கோரிய மனு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் மார்ச் 2021 இல் தள்ளுபடி செய்துவிட்டது. இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் சட்டம் வெளிப்படையானது என்று மத்திய அரசு தனது பதில் பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்