ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகளுக்கு தண்டனை! உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

By SG BalanFirst Published May 3, 2023, 8:09 AM IST
Highlights

ஜாமீன் மறுக்கும் மாஜிஸ்திரேட்டின் நீதித்துறை பணி திரும்பப் பெறப்படும் என்றும், அவர் நீதிமன்ற அகாடமிக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவாக எச்சரித்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஒரு நீதிபதியிடமிருந்து நீதித்துறைப் பணியை திரும்பப் பெற்று, அவரது திறமையை மேம்படுத்த நீதித்துறை அகாடமிக்கு அனுப்புமாறு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாயக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றங்கள், காவல் தேவைப்படாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கத் தயக்கம் காட்டுவதன் கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், பல்வேறு தீர்ப்புகளில் ஜாமீன் வழங்குவதில் தாராளமாக இருக்க வேண்டும் என்றும், வழக்கமான இயந்திரத்தனமான முறையில் தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பிக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறது.

இதுகுறித்து மார்ச் 21 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை மீறினால், மாஜிஸ்திரேட்டின் நீதித்துறை பணி திரும்பப் பெறப்படும் என்றும், அவர் நீதிமன்ற அகாடமிக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவாக எச்சரித்திருந்தது. ஆனால், நீதிமன்றங்கள் அந்த உத்தரவைப் பின்பற்றவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, ஏப்ரல் மாதம் இரண்டு வழக்குகளில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். திருமண தகராறு வழக்கில், லக்னோவில் உள்ள செஷன்ஸ் நீதிபதி ஒருவர், விசாரணையின்போது கைது செய்யப்படாத போதிலும், ஒரு ஆண் மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரரின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தார். மற்றொரு வழக்கில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது.

2 ஆண்டு சிறைக்கு எதிரான ராகுலின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எப்போது? தேதியை சொன்ன குஜராத் உயர்நீதிமன்றம்

இவ்விரு வழக்குகளிலும் ஜாமீன் மறுக்கப்பட்டது குறித்து வேதனையை வெளிப்படுத்திய நீதிபதிகள், "இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு இணையானது. அதை பின்பற்ற வேண்டும். உத்தரபிரதேசத்தில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது." என்று கூறியுள்ளது.

"மார்ச் 21 அன்று எங்கள் கடைசி உத்தரவுக்குப் பிறகும், எங்கள் உத்தரவை முற்றிலும் மீறும் வகையில் லக்னோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது... இந்த உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்... உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறை அகாடமியில் அவரது திறமையை மேம்படுத்துவது அவசியம்" என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.

ஜனநாயகத்தில் போலீஸ் ஆட்சிக்கு இடமில்லை என்றும் விசாரணை அமைப்புகள் தேவையில்லாமல் இயந்திரத்தனமாக மக்களைக் கைது செய்யப்படுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம், விசாரணை அமைப்புகள் கைது நடவடிக்கை எடுப்பது குறித்து வழிகாட்டுதல்களை வழங்கியது எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் குற்ற வழக்குகளில் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்று கூறியிருந்ததையும் குறிப்பிட்ட நீதிபதிகள், மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஜாமீன் வழங்குவதில் தாராளமாக இருக்க நீதிமன்றங்களைக் கேட்டுக் கொண்டனர்.

"பொதுவாக கிரிமினல் நீதிமன்றங்கள், குறிப்பாக விசாரணை நீதிமன்றங்கள், சுதந்திரத்தின் காவல் தேவதைகளாக செயல்பட வேண்டும். சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம், கிரிமினல் நீதிமன்றங்களால் பாதுகாக்கப்பட வேண்டும்,  செயல்படுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பின் விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளைப் பாதுகாப்பது குற்றவியல் நீதிமன்றத்தின் புனிதமான கடமையாகும்," என்றும் நீதிமன்றம் தனது ஜூலை மாத தீர்ப்பில் கூறியது.

ஜாமீன் மனுவை நிராகரிக்காத வகையில் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ உள்ளிட்ட வழக்குத் தொடரும் முகமைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தங்கள் வழக்கறிஞர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, நீதித்துறை அதிகாரிகள் மத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பிராமணர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்கள், அவர்களை விரட்டியடிக்க வேண்டும்: ஆர்ஜேடி தலைவர் கருத்தால் சர்ச்சை..

click me!