ஞானிவாபி மசூதி வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும்... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published May 20, 2022, 4:38 PM IST
Highlights

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட, தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், மசூதியில் களஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. இதுமட்டுமின்றி ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மசூதியில் ஆய்வு பணி துவங்கியது. இதையொட்டி, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சில் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து அந்த பகுதிக்குள் யாரும் நுழைய கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மசூதியில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மசூதி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபய் நாத் யாதவ், கள ஆய்வு செய்த ஆணையர் அஜய் மிஸ்ரா மீது கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார். அவர் நடுநிலையாக இல்லாமல், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் புகார் அளித்தார்.

அதனை ஏற்றக்கொண்ட நீதிபதி ரவி குமார், கள ஆய்விற்கு தலைமை ஏற்றிருந்த ஆணையர் மிஸ்ராவை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும், கள ஆய்வின் அறிக்கையை உதவி ஆணையர்களில் ஒருவரான விஷால் சிங் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து உதவி ஆணையர் விஷால் சிங் சார்பில் அறிக்கை தாக்கலுக்கானக் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு மூன்று நாள் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கை மே 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வாரணாசி நீதிமன்றம் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் இன்று விசாரணையைத் தொடர்ந்தது. அப்போது ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, ஆய்வு விவரங்களை கசிய விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

click me!