நியூஸ் க்ளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தாவை உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நியூஸ் க்ளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தாவை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் அவரை கைது செய்தது சட்ட விரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த நியூஸ் கிளிக் இணையதளம் சீன ஆதரவுப் பிரச்சாரத்திற்காக ரூ.38 கோடி நிதி பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. அதில், நெவில் ராய் சிங்கம் என்ற அமெரிக்க தொழிலதிபரின் மின்னணு அஞ்சல் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சிபிஐ(எம்) தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் தூதரக அதிகாரிகள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஓய்வுபெற்ற பல்துறையை சேர்ந்தவர்கள் என மொத்தம் 255 பேர் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதினர். அதில், நியூஸ் கிளிக் இணையதளம் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மேலும், நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்கள், அதன் பத்திரிகையாளர்கள், ஊழியர்களின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பணமோசடி மற்றும் சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு தொடர்பாக அந்த சோதனை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தா, மனிவள மேம்பாட்டு அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். பிரபீர் புர்காயஸ்தா மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) பாய்ந்தது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை நாளை தள்ளி வைப்பு: அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு!
இதனிடையே, தனது கைதை எதிர்த்து பிரபீர் புர்காயஸ்தா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நியூஸ் க்ளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தாவை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் அவரை கைது செய்தது சட்ட விரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும், இந்த வழக்கில் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், விசாரணை நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிரபீர் புர்காயஸ்தாவை ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவி, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் அமித் சக்ரவர்த்தி அப்ரூவர் ஆகி விட்டதால், குற்றப்பத்திரிகையில் அவர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை கடந்த 6ஆம் தேதி அவரை விடுதலை செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.