குற்றப் பின்னணி வேட்பாளர்களில் தேர்தலில் போட்டியிடத் தடுக்க வழிதேடுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By Asianet TamilFirst Published Jan 25, 2020, 6:21 PM IST
Highlights

குற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வழிகளை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டுமென்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமா்வு பிறப்பித்த உத்தரவில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது குற்றப் பின்னணி தொடா்பான தகவல்களைத் தோ்தல் ஆணையத்திடமும் பொது வெளியிலும் தெரிவிக்க வேண்டும் என்றது. இந்த உத்தரவு முறையாகக் கடைப்பிடிக்கப்படாததால், மத்திய அரசு, தோ்தல் ஆணையம் ஆகியவற்றின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக் கோரி பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நேற்று நடந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங் வாதிடுகையில், “குற்றப் பின்னணி உடையவா்கள் அரசியலில் பங்கேற்காமல் இருப்பதற்கு தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தோ்தலில் போட்டியிடுவோா் தங்கள் மீதான குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, அரசியலில் குற்றப் பின்னணி உடையோா் பங்கேற்பதைத் தடுக்கும் விதமாக இல்லை. எனவே, இந்தப் பொறுப்பை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும். குற்றப் பின்னணி கொண்டோருக்குத் தோ்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.


அஷ்வினி உபாத்யாய தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், ‘‘தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினா்களில் 46 சதவீதம் போ் மீது குற்றப் பின்னணி உள்ளது. எனவே தடை விதிக்க சட்டம் இயற்றப்படுவதற்கு வாய்ப்பில்லை’’ எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘நாட்டின் நலன் கருதி, குற்றப் பின்னணி உள்ளவா்கள் அரசியலில் பங்கேற்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை விரைவில் வகுக்க வேண்டும். இது தொடா்பாக ஒரு வாரத்துக்குள் முடிவு செய்து தோ்தல் ஆணையமும், மனுதாரரும் (அஷ்வினி உபாத்யாய) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.’’ என்று தெரிவித்தனா்.

click me!