
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை செய்து கடந்த மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே, மத்திய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவை ரத்துசெய்யக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. அதே நேரத்தில் மத்திய அரசின் கால்நடை சந்தை ஒழுங்குமுறை விதிகளை ரத்து செய்யக்கோரி ஐதராபாத்தை சேர்ந்த அப்துல் பகீம் குரேஷி உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு யாரையும் பாதிக்காத வகையில் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடுவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என்றும், மறு அறிவிக்கைக்கு பிறகு அதனை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு அனைவருக்கும் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த மே மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை விதித்து உள்ள தடை தொடரும் என்றும் இந்த தடை நாடு முழுவதும் அமலில் இருக்கும்என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதன் மூலம் கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை வாங்கவும் விற்கவும் உச்சநிதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார்.