
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 4 மூத்த நீதிபதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு இன்னும் முடிவுக்கு வரவில்லை என அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இதன் காரணமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் மூத்த நீதிபதிகளுக்கும் இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்தப் பிரச்னை தொடர்பாக இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகள் குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கூறிய 4 மூத்த நீதிபதிகளும் திங்கட்கிழமை அன்று மீண்டும் பணிக்கு திரும்பினர்.
நீதிமன்றத்தில் நேற்று காலை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் 4 மூத்த நீதிபதிகளும் சந்தித்துப் பேசினர். அப்போது இருதரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் நீதிபதிகள் இடையேயான பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை எனவும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பிரச்னை முழுமையாக முடிவுக்கு வரும் எனவும் உச்சநீதிமன்ற அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார்.