
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் பாய் தொகாடியா, தன்னை என்கவுண்டரில் போட்டுத் தள்ள மத்திய அரசு சதி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொகாடியா மீது கடந்த 2015ஆம் ஆண்டில், சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது. அவர் மீது கைது செய்ய பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் பேரில் ராஜஸ்தான் போலீசார் நேற்று அவரின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் தொகாடியா வீட்டில் இல்லை. இதையடுத்து திரும்பிச் சென்ற போலீஸார், அவரைத் தேடுவதாகக் கூறினர். இதனிடையே, வி.எச்.பி தொண்டர்கள் சோலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொகாடியாவை போலீஸார் கைது செய்துள்ளனர் என கோஷங்கள் எழுப்பி சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஆனால் போலீஸார் அவரைத் தேடுவதாகக் கூறியதும், போலீஸார்தான் அவரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என வற்புறுத்தினர். இதனால் காணாமல் போன தொகாடியாவை தேட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதனிடையே தொகாடியாவை தாங்கள் கைது செய்யவில்லை என ராஜஸ்தான் காவல் துறை மூத்த அதிகாரி கூறினார். நேற்று காலை 11 மணியளவில் ஆட்டோ ஒன்றில் கிளம்பிச் சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கிழக்கு ஆமதாபாத் நகரில் கோடார்பூர் பகுதி அருகே பூங்கா ஒன்றில் தொகாடியா மயக்கமடைந்த நிலையில் கிடைந்துள்ளார். யாரோ ஒருவர் மயக்க மடந்தை நிலையில் கிடக்கிறார் என்று எண்ணிய ஒருவர், ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொகாடியா குறைந்த சர்க்கரை அளவால சுயநினைவற்ற நிலையில் கீழே விழுந்துள்ளார் என்றும், அவரது உடல் நிலை முழுவதும் சீரான பின் மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என்றும் சந்திரமணி மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரவீண் தொக்காடியா கூறியபோது, ராஜஸ்தான் மற்றும் குஜராத் போலீசார் என்னை மிரட்டினர். போலீசாரிடம் இருந்து தப்பிக்கவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்தேன். மத்திய அரசு என் குரலை ஒடுக்கப் பார்க்கிறது. பொய்யான வழக்கில் எனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை நியாயப்படுத்த முடியாது. பழைய வழக்கு ஒன்றுக்காக என்னை குறிவைத்துள்ளனர். எனது குரலை ஒடுக்க முயற்சி நடக்கிறது. நேற்று எனது அலுவலகத்தில் பூஜை நடத்தியபோது, என்னை சந்தித்த சிலர் உங்களை என்கவுன்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறினர். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதைச் செய்வேன் என்று கூறினார்.
பிரவீண் தொகாடியாவின் இந்த விவகாரத்தால், நேற்றும் இன்றும் தேசிய அரசியலில் பெரும் புயல் கிளம்பியது.