சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை தாக்கினால் இனிமே அவ்ளோதான்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

First Published Jan 16, 2018, 1:37 PM IST
Highlights
supreme court condemns who attack couples


சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளைத் தாக்குவது சட்டவிரோத செயல் என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

திருமண வயதை எட்டிய ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதை ஊர் பஞ்சாயத்தோ தனிநபரோ அல்லது இந்த சமூகமோ கேள்வி எழுப்பமுடியாது எனவும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்களை தாக்குவது சட்ட விரோத செயல் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதிகள் கவுரவ கொலை செய்யப்படுவதை தடுக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜூ ராமச்சந்திரன் அளித்த பரிந்துரைகள் மீது மத்திய அரசின் நிலைப்பாட்டையும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

சக்தி வாஹினி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2010-ல் தொடர்ந்த மனுவில், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகளை குறிப்பிட்டப்பட்டிருந்தது. மேலும் இதைத்தடுக்க வேண்டும் என கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு, கிராம பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்கவும் கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றமே ஏதாவது வழிமுறையை சொல்ல வேண்டும் எனக் கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதிகளை தாக்குவது சட்டவிரோதமானது என கூறியுள்ள உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

click me!