
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க தமிழ்நாடு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கூடுதல் கால அவகாசம் கேட்ட வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுகாவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயா் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதேபோன்று, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்ட மத்திய குற்றப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் செயல்படுத்த தவறியதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி வழக்கை இரண்டு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என கடந்த மே மாதம் 16ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், விரிவான விசாரணை மேற்கொள்ள இன்னும் 6 மாதங்கள் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான புகார் மனு மீதான விசாரணையை முடிக்க எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு டிஜிபி, உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை கேட்கட்டும் என தெரிவித்தது.
இதையடுத்து, அரை மணி நேரத்தில் எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொல்கிறோம் என தமிழ்நாடு அரசு பதிலளித்தது. அரை மணி நேரத்தில் தெரிவிக்காவிட்டால் தமிழ்நாடு டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து, மனுவில் குறிப்பிட்டுள்ளதுபடி, செந்தில் பாலாஜி வழக்கை நிறைவு செய்ய 6மாத கால அவகாசம் வேண்டும் என மத்திய குற்ற புலனாய்வு காவல்துறை தரப்பில் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பீர்கள், 24 வருடமானாலும் வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பீர்கள், அரசுகள் எப்படி செயல்படும் என்பது தெரியும்.” என காட்டம் தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்ச்சியாக, செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதற்கு மேல் எந்த கால அவகாசமும் வழங்கப்படாது. விசாரணை முடிக்கவில்லை என்றால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.