மகாராஷ்டிர விவசாயி ஒருவர், தனது வயலில் தக்காளி திருட்டு போகாமால் இருப்பதற்காக சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.
நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, விவசாயி ஒருவர் திருட்டு அல்லது வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்களுக்கு பயந்து தனது வயலில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.
தக்காளிப் பழங்களின் அதிக விலை காரணமாக அவற்றை பாதுகாப்பதற்காக அவரது பண்ணையில் காவல் காக்க முடிவு செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் 160 ரூபாயாக உள்ளது.
சிறிது காலத்திற்கு, அரசாங்கம் மானிய விலையில் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்தது. ஆனால் இப்போது மானிய விலை தக்காளி அதிகமாகக் கிடைக்காததால் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
இச்சூழலில் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள விவசாயி ஷரத் ராவத்தே, தனது வயலில் விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ள தக்காளியைப் பாதுகாக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளார். இந்த கேமராக்களைப் பொருத்துவதற்கு ரூ.22 ஆயிரம் செலவிட்டதாகச் சொல்லும் அவர், இது காலத்தின் தேவை என்றும் கூறுகிறார்.
தக்காளி விலை உயர்வுக்கு மத்தியில், விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும் தக்காளிப் பெட்டிகள் மொத்தமாகத் திருடப்பட்ட சம்பவங்கள் பல வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
திங்களன்று, கர்நாடகாவின் கோலாரில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு தக்காளியைக் கொண்டு சென்ற லாரி காணாமல் போனதாக கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் இருந்த தக்காளியின் மதிப்பு சுமார் 21 லட்சம் ரூபாய் என்றும் கூறுகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காய்கறி சந்தையில் உள்ள கடைகளில் இருந்து சுமார் 40 கிலோ தக்காளியை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு சில்லறை விற்பனை விலை 300 சதவீதம் உயர்ந்தது. பின், கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.120 வரை விலை குறைந்திருந்தது. தற்போது மீண்டும் சில்லறை விற்பனை விலை ரூ.200க்கு மேல் உயர்ந்திருக்கிறது.