மௌனம் கலைத்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி!! 7 மாதத்துக்கு பிறகு பதிலடி கொடுத்த தீபக் மிஸ்ரா

By karthikeyan VFirst Published Aug 16, 2018, 12:10 PM IST
Highlights

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள், தன் மீது முன்வைத்த விமர்சனங்களுக்கு 7 மாதங்களுக்கு பிறகு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

நீதித்துறையை விமர்சனம் செய்வது, பலவீனப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தன் மீது விமர்சனம் வைத்த மூத்த நீதிபதிகளுக்கு மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார். 

நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஜனவரி 12ம் தேதி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய் மற்றும் மதன் பி லோகூர் ஆகிய நால்வரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அப்போது, உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவே தன்னிச்சையாக எடுக்கிறார். வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. சில முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட நீதிபதிகளுக்கே ஒதுக்குகிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஜனநாயகத்தை காக்க வேண்டிய உச்சபட்ச நீதி அமைப்பான உச்சநீதிமன்றத்திலேயே ஜனநாயகம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தது தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிகழ்விற்கு பிறகு, இதுதொடர்பான வாதங்கள் எழ ஆரம்பித்தன. தலைமை நீதிபதி தன்னிச்சையாகவும் பாரபட்சமாகவும் செயல்படுகிறார் என மூத்த நீதிபதிகளே குற்றம்சாட்டியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு இதுதொடர்பான மௌனத்தை கலைத்து, தன் மீதான நீதிபதிகளின் விமர்சனத்துக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. 

டெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஒரு அமைப்பை விமர்சிப்பதும், அதன் மீது தாக்குதல் நடத்துவதும், அழிப்பதும் எளிமையானதுதான். ஆனால், அதை சிறந்த அமைப்பாக வளர்த்தெடுப்பதும், அதில் சீர்திருத்தம் கொண்டுவருவதும் சவாலான மற்றும் சிரமமான விஷயமாகும். ஆக்கப்பூர்வமான முறையில் பங்காற்றினால் மட்டுமே நீதித் துறையை புதிய உச்சத்துக்கு வளர்த்தெடுக்க முடியும் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். 

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள், தன் மீது முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பாக மௌனம் காத்து வந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 7 மாதங்களுக்கு பிறகு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். 
 

click me!