
பிரியாணியில் விஷம் கலந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் யாதத்ரி - புவனகிரி மாவட்டம், ராஜபேட்டையைச் சேர்ந்தவர் பால்ராஜ் (44) இவருக்கு திருமலா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். பால்ராஜ் அங்குள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், பால்ராஜ் குடும்பத்தை சேர்ந்த யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அருகில் இருந்தோர், கூப்பிட்டு பார்த்துள்ளனர். எந்த எதிர் குரலும் கேட்காததால், அவர்கள் வீட்டில் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது பால்ராஜ் உள்ளிட்ட 7 பேர் பிணமாக இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பின்னர், அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 7 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பிரியாணியில் விஷம் கலந்து வீட்டில் உள்ள 7 பேரும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பால்ராஜ், அவரின் மனைவி திருமலா, குழந்தைகள் சிவானி, சிந்து, பன்னி மற்றும் மாமனார் பாலநரசய்யா, பரத்தம்மா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. தற்கொலைக்கு, கோழிப்பண்ணையில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.
கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 7 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.