
ரேஷன் கடைகளில் இனி சர்க்கரை இல்லை? அருண் ஜேட்லி வைத்த ஆப்பு..
2016 – 2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். அப்போது நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள சர்க்கரைக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக மாநிலங்கள் பொதுச் சந்தையிலிருந்து சர்க்கரையை மொத்த விலைக்கு வாங்குகின்றன.
இந்த சர்க்கரை கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் 50 காசுகள் என்ற மானிய விலையில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சர்க்கரைக்கு மத்திய அரசு கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய் 50 காசுகள் மானியமாக வழங்கி வந்தது.
இந்த சர்க்கரை ரேஷன் கடைகள் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 40 கோடி பயனாளிகளுக்கு ஆண்டுதோறும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக, 21 லட்சம் டன் எடையுள்ள சர்க்கரை ஆண்டுதோறும் வாங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் அமல் படுத்தப்பட்டுள்ள இச்சட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் என்ற வேறுபாடு கிடையாது.
எனவே, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்கான மானியத்தை இனி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்காது. இந்த அறிவிப்பை அருண் ஜேட்லி நேற்று பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.
அதே நேரத்தில் முந்தைய திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகளை வழங்குவதற்காக ரூ.200 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.