இந்தியா ஒலிம்பிக்கை நடத்த விரும்புகிறது, ஜி20 உச்சி மாநாடு இந்தியாவுக்கு மெகா நிகழ்வுகளை நடத்துவதற்கான சக்தியும் உள்கட்டமைப்பு வசதிகளும் இருப்பதை பறைசாற்றும்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற மூன்று நாள் ஜி20 விவசாய அமைச்சர்கள் கூட்டம், உலகின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகளின் கூட்டங்களை இந்தியா சிறந்த முறையில் நடத்துவதற்கு உதாரணமாக அமைந்தது.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜி20 தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாடு என்ற முறையில் இந்தியா இந்த பொறுப்பை தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது என்றார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தை எடுத்துக்காட்டாகக் கூறிய ஜெய்சங்கர், சாமானிய மக்கள் கவலைப்பட வேண்டிய தலைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்று கூறினார்.
உலகெங்கிலும் இதுபோன்ற சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியா இந்தக் கூட்டங்களை நடத்தும் விதம் இதற்கு முன் யாரும் செய்யாத விதமாக உள்ளது. இது இந்தியாவின் சக்தியை வலியுறுத்தவும், பன்முகத்தன்மை கொண்ட நாடாகக் காட்டவும் உதவுகிறது.
"பெற்றோர்கள் தங்கள் மகளின் திருமணத்தை விருந்தினர்கள் அனைவரும் என்றென்றும் நினைவுகூருவதற்காக பிரமாண்டமான முறையில் நடத்துவது போல இருக்கிறது" என்று முன்னாள் தூதர் ஒருவர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 9-10 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாடு, ஒலிம்பிக் போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்துவதற்கான இந்தியாவின் திறனை சோதிக்கும். இதற்காக டெல்லியில் 40 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வருகை தருகின்றனர்.
"இந்தியா ஒலிம்பிக்கை நடத்த விரும்புகிறது, ஒருவேளை ஜி-20 உச்சி மாநாடு இந்தியாவை இத்தகைய மெகா நிகழ்வுகளுக்கான திறன் மற்றும் உள்கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாடு என்பதை நிரூபிக்கக் கூடும்" என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருகைதரும் தலைவர்களுக்கு உயர்தர சொகுசு கார்களை வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறது. “ஒவ்வொரு நிகழ்வும் நமது வரம்புகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றைச் சரிசெய்யவும் உதவுகிறது; மெர்சிடிஸ் கார்களைப் பெறுவது ஒரு சவாலாக இருந்தது" என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோ பிடன் செப்டம்பர் 7 அன்று இரண்டு விமானங்களுடன் இந்தியா வருகிறார். மற்ற நாடுகளின் தலைவர்களும் அப்படித்தான் வருகிறார்கள். இதனால், டெல்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான பகுதிகளில் போக்குரவத்து கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டுள்ளன.
இன்று உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ள இந்தியா, மேலும் 19 நாடுகளை (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா) உள்ளடக்கிய ஜி20 மாநாட்டுக்கு தலைமை வகிக்கிறது.
G20 உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஜி20 மாநாட்டுக்குத் தலைமை ஏற்று நடத்துவது, வேகமாக வளரும் நாடாகவும், உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நாடாகவும் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது.