
ராமர் கோயில் பிரச்சினையில், முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக வந்து கொண்டு இருந்தபோதே, டுவிட்டரில் கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, “ராமர் கோயில் பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படும். 21-ந்தேதி முதல் நாள் தோறும் விசாரணை நடத்த அவசர மனுத் தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்து இருந்தார்.
அதற்கு ஏற்றார்போல், அவர் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், “ராமர் கோயில் பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே, சமரசப் பேச்சின் மூலம் தீர்க்கலாம், தேவைப்பட்டால், மத்தியஸ்தம் செய்யத் தயார்” என்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்து இருந்தார்.
அதுமட்டுமல்லாமல், மத்திய அரசுக்கு எதிராக யாரெல்லாம் பிரச்சினை செய்கிறார்களோ, கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ அவர்களை கடுமையான வார்த்தைகளால் சுப்பிரமணிய சாமி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று திரண்ட போது, “பொறுக்கிகள்” என்று தமிழர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் விதமாக அவதூறாக கருத்து பதிவிட்டார்.\
சமீபதத்தில், ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போது, மத்திய அரசை எதிர்த்து மீனவர்கள், அரசியல் கட்சியினர் கருத்து வெளியிட்டனர்.
அப்போது, டுவிட்டரில் கருத்து வெளியிட்ட சுப்பிரமணியசாமி, “பொறுக்கிகள் படகை எடுத்துக்கொண்டு இலங்கை கடற்படையினருடன் சண்டை போடட்டும் பார்க்கலாம்” என்று எள்ளி நகையாடி, கிண்டல் செய்து இருந்தார்.
இந்நிலையில், ராமர் கோயில் விவகாரத்தில் டுவிட்டரில் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட கருத்தில், “ சரயுக்கு பகுதியைத் தாண்டி, முஸ்லிம்கள் தங்கள் மசூதியை கட்டிக்கொள்ள வேண்டும். என்னுடைய இந்த திட்டத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், 2018ம் ஆண்டு, மாநிலங்கள் அவையில், பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும்.
அப்போது, ராமர் கோயில் கட்டுவதற்காகவே தனிச்சட்டத்தை உருவாக்கி கோயிலை கட்டுவோம்” என்று கூறியிருக்கிறார்.
மற்றொரு டுவிட்டில் “ கடந்த 1994ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதித்ததின் அடிப்படையில் ராமஜென்ம பூமியில், ஒரு இடத்தில் தற்காலிகமாக ராமர் கோயில் எழுப்பப்பட்டு தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன.
யாருக்கேனும், துணிச்சல் இருந்தால், அந்த இடத்தை இடித்துக்காட்டுகள் பார்க்கலாம்” எனத் பதிவிடப்பட்டுள்ளது.