
ஆதார் கார்டுகள் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருக்கிறேன் என்று பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை மத்திய
அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை, நலத்திட்டங்களில் இணைக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆதாரை கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஆதார் குறித்த மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம்அறிவித்தது.
இதையடுத்து, சமூகநலத் திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவையும், 2018ம் ஆண்டு மார்ச்31-ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி நேற்று டுவிட்டரில் ஆதார் எண் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-
சமூக நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதியாக ரத்து செய்யும். ஆதார் எண்ணால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது, எப்படி கட்டாயப்படுத்த முடியும்?. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் திடீர் சர்ச்சை?
நலத்திட்டங்களுக்கு ஆதாரை மத்திய அரசு கட்டாயப்படுத்தியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட உள்ளது. இந்த உத்தரவின் எதிரொலியாகவே சுப்பிரமணிய சாமி இந்த அறிக்கையை டுவிட்டரில்வெளியிட்டுள்ளார்.
அரசியல் சாசன அமர்வு விசாரிக்க இருக்கும் ஆதார் தொடர்பான மனுக்களில் மத்திய அரசுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் சூழல் இருப்பதால், அதற்கு முன்கூட்டியே கவுரமாக அரசை பின் வாங்க வைக்க சுப்பிரமணிய சாமி நடத்தும் நாடகமாகும். அதனால்தான், தேசப்பாதுகாப்புக்கு ஆதாரால் அச்சுறுத்தல் என்று புதிய ‘சர்ச்சையை’ சாமி கிளப்பியுள்ளார்.