
அமெரிக்காவில் வெளிவந்து கொண்டு இருக்கும் புகழ்பெற்ற ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளேட்டின் முதல் பக்கத்தில் “கேரள மாநிலத்தை” புகழ்ந்து கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.
“கம்யூனிசத்தின் வெற்றி” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த கட்டுரையில் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் விளைந்த நன்மைகள், மக்களுக்கு கிடைத்த திட்டங்கள், குறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக பினராயி விஜயன் இருந்து வருகிறார்.
அங்கு நிலவும் மதச்சார்பின்மையை, சகிப்புத்தன்மையை குலைக்கும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா கட்சி நடந்து கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
கேரளாவில் தடம் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு ‘தகிடுதித்தோம்’ வேலைகளை பா.ஜனதா கட்சியும், இந்து அமைப்புகளும் செய்து வருகின்றன.
இதனால், இரு தரப்பிலும் பல “வெட்டு, குத்துக்கள்” நடந்து, பல உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ளன. இரு தரப்புக்கும் இடையே “வார்த்தைப் போர்” தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சூழலில், கேரள மாநிலத்தை, ‘ இந்தியாவின் முகம்’ என்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் சமீபத்தில் வர்ணித்ததார். பா.ஜனதா கட்சியில் இருந்த வந்த ஒருவரை தனது எதிரியை புகழந்தால், அந்த கட்சியினருக்கு பிடிக்குமா, இந்த வார்த்தை அவர்களின் கோபக்கனலில் மேலும் எண்ணெயை ஊற்றியது.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “தி வாஷிங்டன் போஸ்ட்” நாளேடு, தனது முதல் பக்கத்தில் கேரள மாநிலம் குறித்தும், கம்யூனிஸம் குறித்தும் ஞாயிற்றுக்கிழணை கட்டுரை வெளியிட்டுள்ளது. ‘கம்யூனிச வெற்றி: என்ற தலைப்பில் கிரேக் ஜெபே, விதி ஜோஷி ஆகியோர் எழுதியுள்ளனர்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி வெற்றி பெற்றது, மற்ற நாடுகள் பின்பற்றும் கம்யூனிஸத்தில் இருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது, அங்கு நடக்கும் போராட்டங்கள், அதன் வெற்றி ஆகியவை குறித்து கட்டுரை விவரிக்கிறது.
கேரள மாநிலத்திஸ், ஒரு காலத்தில் மக்களுக்கு கம்யூனிசமும், மார்க்சிஸமும் தெரியாத நிலையில், மக்கள் மத்தியில் எப்படி கம்யூனிஸம் சென்று சேர்ந்தது என்பதை விளக்குகிறது.
குறிப்பாக 1950ம் ஆண்டுகளில் மக்களிடத்தில் இடதுசாரி சிந்தனையை புகுத்த, பாடல்களை கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தியது. ‘நீங்கள்இனி கம்யூனிஸ்தாகி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பிரபலமாகி மக்கள் மனதில் கம்யூனிசம் பதியத் தொடங்கி, வேர்விட்டு முளைக்கத் தொடங்கியது. அதன் விருட்சமாக, வெற்றியாக கடந்த 1957-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதன் முதலாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது.
மேலும், இந்த கட்டுரையில் குறிப்பாக மாநிலத்தின் தற்போதைய நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்கை மையப்படுத்தி கூறப்பட்டுள்ளது. அவரின் நீண்டகால கம்யூனிஸ பயணம், அரசியல் வாழ்க்கை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமஸ் ஐசக் கம்யூனிஸத்தின் மீது தீவிரப் பற்றாளர் என்பதற்கு உதாரணத்தையும் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. தனது தந்தையின் சொந்த தொழில்சாலையில், தொழிலாளர்களுடன் சேர்ந்து தந்தைக்கு எதிராக இளம்வயதில் போராட்டம் நடத்தியவர் தாமஸ் ஐசக்.
“ தொழிலாளர்களுடன் நீங்கள் பேச்சு நடத்தாவிட்டால், நான் தொழிலாளர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டம் செய்ய வேண்டியது வரும்’’ என்று தந்தையையே எதிர்த்தவர் ஐசக் என அவரின் எளிமையையும், கம்யூனிச பற்றையும் விவரிக்கிறது.
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ ஆட்சியின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுவது 95 மக்கள் கல்வியறிவு பெற்றதும், சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் முதல் தரமான மருத்துவசிகிச்சை கிடைக்கச் செய்து இருப்பது ஆகும்.
அதேசமயம் அந்த கட்டுரை கம்யூனிச ஆட்சி குறித்த சில விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது.
கேரள மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து கல்வி கற்ற மக்கள் பெரும்பாலும், அந்த மாநிலத்தில் இல்லாமல் வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் தொழில் செய்வதும் ஏன் எனத் தெரியவில்லை, அவர்களுக்கான வாய்ப்புகள் அங்கு இருப்பதில்லை எனவும், அந்த மாநிலத்தில் தொழில்சாலைகள் குறைவாக இருப்பதையும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் வளைகுடா நாடுகளிலேயே தங்கிவிடுவதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று நன்றாக சம்பாதிக்கிறார்கள். தாங்கள் ஈட்டிய பணத்தைக் கொண்டு மீண்டும் தங்கள் மாநிலத்துக்கு வந்து ஆடம்பரமான, பெரிய வீடுகளைக் கட்டிவிட்டு. மீண்டும் கிறார்கள் வளைகுடா நாட்டுக்கே சென்றுவிடுகிறார்.
அவர்கள் கட்டிய வீடுகள் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் பூட்டியே கிடக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, கம்யூனிச கட்சி ஆளும் மாநிலம் எனச் சொல்லிக்கும் கேரளாவில், சாலை ஓரத்தில் வீடின்றி வசிக்கும் ஏழை மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மூலம் ஏராளமான பணம் மாநில அரசுக்கு வந்தாலும் கூட நிதிப்பற்றாக்குறை என்ற குறை அரசில் நிலவுகிறது என்று விமர்சனத்தையும் அந்த நாளேடு முன்வைத்துள்ளது.
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி வெற்றி பெற்றுவிட்டதா அல்லது தோல்வி அடைந்துவிட்டதா என அந்த மாநிலத்தில் மிகப்பெரிய விவாதம் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த விவாதத்தை இப்போது முன்னெடுத்து நடத்திக்கொண்டு இருக்கும் பா.ஜனதாவுக்கு வாஷிங்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரை தங்களை மதிப்பீடு செய்து கொள்வதற்கு நல்வாய்ப்பாக அமையும்.
கடந்த ஆண்டு கேரள மாநிலம் வந்திருந்தபோது, கேரள மாநிலத்தை சோமாலியா நாட்டுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசிஇருந்தார். ஏனென்றால், கேரள மாநிலத்தில் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் வகுப்பினரிடையே குழந்தைகள் இறப்பு அதிகரித்து, அவர்கள் மக்கள் தொகை சரிந்துவிட்டது என்றார்.
அதற்கு கேரள மக்கள் டுவிட்டர் மூலம் பதிலடி கொடுத்து தங்களை நிரூபித்தனர்.
கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை அழைத்து வந்து பா.ஜனதா கட்சி ஊர்வலம் நடத்தியது.
ஒருநேரத்தில் கேரள பழங்குடியின குழந்தைகள் இறப்புக்கு குறித்து கண்டனம் தெரிவித்த மோடி, உத்தரப்பிரதேச மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தது குறித்து வாய்திறக்கவில்லை. அந்த மாநிலத்தின் முதல்வரை முன்னிறுத்தி கட்சிக்கு பிரசாரம் செய்ய முன்வந்துள்ளார் என மார்க்சிஸ்ட் கட்சி இப்போது பதிலடி கொடுத்தது.
இரு கட்சியினருக்கும் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
எது எப்படி இருந்தாலும், கேரள மாநிலத்தின் மதச் சகிப்புத்தன்மையைும், சமூக ஒற்றுமையையும் மதவாத அமைப்புகளால் அசைக்கக்கூட முடியாது என்பதை ஒவ்வொரு தருணத்திலும், தேர்தலிலும் கேரள மக்கள் உணர்த்தி வருகிறார்கள்.
அதன் தோல்விதான் இன்னும் பா.ஜனதா காலூன்ற முடியாமல் அந்தரத்தில் அல்லாடுகிறது.