‘திருப்பதி லட்டு தட்டுகளை’ ஆம்புலன்சிலா கொண்டுவருவது?... பக்தர்கள் அதிருப்தி

First Published Oct 31, 2017, 10:15 AM IST
Highlights
thiruppathy laddu take by ambulance


திருப்பதிக்கு ஆம்புலன்சில் லட்டு தட்டுக்கள் கொண்டு வரப்பட்டதை கண்ட பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

லட்டு பிரசாதம்

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானின் தரிசனத்துக்கு அடுத்தபடியாக லட்டு பிரசாதத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அதனால் நீண்ட நாள்கள் கெடாத வகையில் லட்டு பிரசாதத்தை தயார் செய்ய தேவஸ்தானம் பல வழிகளைக் கடைப்பிடித்து வருகிறது.

பூந்தி தயாரிக்க தனி மடப்பள்ளி, லட்டு பிடிக்க தனி மடப்பள்ளி, பூந்திகளையும், லட்டுகளையும் கொண்டு செல்ல மூடப்பட்ட கன்வேயர் பெல்ட், தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதங்களை கொண்டு செல்ல மூடப்பட்ட தனி வாகனம், லட்டு தட்டுகளை சுத்தம் செய்ய வெந்நீர் கெய்சர்கள் என அனைத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்சில்..

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பாக லட்டு மடப்பள்ளி அருகே லட்டு தட்டுகள் நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்சில் வந்து இறங்கின. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர்கள் பதிலளிக்காமல் சென்றதால் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்.

புகார்

அதற்கு அவர், சுத்தம் செய்யப்பட வேண்டிய தட்டுக்கள் தான் அவை என்று பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் தேவஸ்தான உயர் அதிகாரியிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

அதில், ‘‘திருமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வாங்கிச் செல்லும் லட்டு பிரசாதத்தை ஊழியர்கள் அலட்சியமாக கையாண்டு வருகின்றனர்.

வேதனை

விபத்து மற்றும் பலவித நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கொண்டு செல்லும் ஆம்புலன்சில் புனிதமான லட்டு பிரசாதத்தை வைக்கும் தட்டுகளைக் கொண்டு சென்றால் அதன்மூலம் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை அறியாமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் தேவஸ்தான அதிகாரிகளின் செயல் வேதனை தருகிறது.

இவ்வாறு நடந்து கொண்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளனர்.

தேவஸ்தானம் விளக்கம்

இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:-

ஏழுமலையானின் பிரம்மோற்சவ வெகுமதியாக திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அளிக்க லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது. லட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பின் காலி தட்டுக்கள் ஆம்புலன்ஸ்களில் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

லட்டு தட்டு கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை கொண்டு செல்ல பயன்படுத்துவது கிடையாது. அவை மருத்துவ மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்தும் ஆம்புலன்ஸ். அதனால் லட்டு தட்டுக்கள் கொண்டு வந்ததில் எவ்வித அபசாரமும் நிகழவில்லை’’ என்று தெரிவித்தனர்.

tags
click me!