
அக்.31 இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லப பாய் படேலின் பிறந்த தினம். இன்றைய தினம் நாட்டின் தேச ஒற்றுமை நாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தில் படேல் சிலைக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்றம் அருகே அமைந்துள்ள படேலின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து தில்லியில் "ஒற்றுமைக்கான ஓட்டம்" நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, இன்று சர்தார் வல்லப பாய் படேல் பிறந்த நாள். முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு நாள். தேசிய ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்தில் இளைஞர்கள் பலர் பங்கேற்றதில் பெருமைப்படுகிறேன். நம் நாட்டின் சுதந்திரத்திற்கு முந்தைய, சுதந்திரத்திற்கு பிறகான படேலின் பங்களிப்பு குறித்து பெருமைப் பட வேண்டும். ஆனால், தேச ஒற்றுமைக்கான அவரின் பங்களிப்பையும் சாதனைகளையும் மறக்கடிக்க சிலர் முயற்சி செய்தனர். இருப்பினும் இளைஞர்கள் அவர் மீது மரியாதை வைத்துள்ளனர். இந்த நாட்டை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்கின்றனர். வேற்றுமைகள் கொண்ட நாடு நம் நாடு. அந்த வேற்றுமையில் ஒற்றுமையே நமது சிறப்பு. பலவிதமான கலாசாரங்கள், வாழ்க்கை முறை, பல மொழிகளுக்கு இந்தியா தாயகமாகத் திகழ்கிறது” என்று பேசினார்.
முன்னதாக, மோடியின் டிவிட்டர் பதிவில், படேலுக்கு மோடி அஞ்சலி செலுத்திய வீடியோ பதிவும் வெளியிடப் பட்டிருந்தது.