போபாலில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரயில் மீது ஆக்ரா ரயில்வே கோட்டத்துகுட்பட்ட பகுதியில் கல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லி நிஜாமுதீன் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் மீது ஆக்ரா ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் கற்கள் வீசப்பட்டதாகவும், இதில் ரயில் பெட்டியின் கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே வட்டாரங்களின்படி, ஆக்ரா ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட மானியா மற்றும் ஜஜாவ் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயிலின் மீது கல் வீச்சு சம்பவம் நடந்ததாகவும், சி-7 பெட்டியின் இருக்கை எண் 13-14 இன் ஜன்னல் கண்ணாடி உடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், வந்தே பாரத் ரயில் மீதான கல் வீச்சு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முதல்வருக்கு பிரதமர் அலுவலகம் பதிலடி!
வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்கப்பட்ட சம்பவம் முதல் முறையாக நடக்கவில்லை. இதற்கு முன்பும், போபால் - நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில், உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும், வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில் சேவையை அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.