மணிப்பூரில் உள்ள தங்கள் மாநில மக்களை மீட்க பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சில மாநிலங்கள் இந்த மீட்புப் பணிக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்கின்றன.
மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உ.பி., இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் அரசாங்கங்கள் மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தங்கள் மக்களை அங்கிருந்து மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே 3ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் மோதல்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்த மாநிலத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு நிலைமை மெல்ல கட்டுக்குள் வந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 355 -ஐ அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மக்களை மணிப்பூரில் இருந்து மீட்டுவர நடவடிக்கை எடுத்துள்ளன. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகள் இதற்காக சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதே நேரத்தில் ராஜஸ்தான் அரசு இண்டிகோ விமானம் மூலம் சுமார் 125 ராஜஸ்தானியர்களை அழைத்து வருகிறது. அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள்.
மணிப்பூரின் அண்டை மாநிலங்களான அசாம், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகியவை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் சிக்கியுள்ள தங்கள் மக்களை வெளியேற்றும் பணியை ஏற்கனவே தொடங்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வரை மணிப்பூரில் படிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 240 மாணவர்கள் வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் பலர் அங்கிருந்து வெளியேறக் காத்திருக்கின்றனர்.
இம்பாலில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து விமானங்களும் அடுத்த சில நாட்களுக்கு முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்பால் - கொல்கத்தா வழித்தடத்தில் விமான கட்டணம் ரூ.22,000 முதல் ரூ.30,000 ஆக உயர்ந்துள்ளது. மணிப்பூரில் உள்ள 22 மகாராஷ்டிர மாணவர்களை முதலில் அஸ்ஸாமுக்கு விமானம் மூலம் அழைத்து வந்து பின்னர் அங்கிருந்து மகாராஷ்டிராவுக்கு அழைத்து வர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14 மாணவர்கள் இம்பாலில் உள்ள சிவசேனா அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் விகாஷ் சர்மா மற்றும் துஷார் அவாத் ஆகிய இருவரிடமும் பேசினேன். நாங்கள் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதியளித்தேன். பயப்பட வேண்டாம் என்று நான் அவர்களிடம் கூறினேன்” என்றார் ஷிண்டே.
வெளியேற காத்திருக்கும் லக்னோவைச் சேர்ந்த மாணவர் அர்பித், "எங்களுக்கு சரியான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை" என்கிறார். பிடெக் நான்காம் ஆண்டு படிக்கும் அவர் இம்பாலில் தனது விடுதியில் தங்கியிருக்கிறார். விடுதி வளாகத்தில் உ.பி.யைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் இருக்கிறார்கள் எனவும் அவர் சொல்கிறார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மணிப்பூரில் இருந்து மாநில மாணவர்களையும் பிற மக்களையும் வெளியேற்ற ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாநிலத்தைச் சேர்ந்த மாணவரை அழைத்து வருமாறு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் மணிப்பூரில் சிக்கியுள்ளனர். அவர்களை அழைத்துவர மாநில அரசு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துவருகிறது. விமானத்தின் நேரம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவிக்கும் என்று மாநில கல்வி அமைச்சர் போட்சா சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா அரசு மணிப்பூரில் படிக்கும் 250 மாணவர்களை அடையாளம் கண்டுள்ளது. அவர்களும் வணிக விமானங்களில் ஹைதராபாத் திரும்ப உள்ளனர். பானிபட்டைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் ஐஐஐடி இம்பாலில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக ஹரியானா தலைமைச் செயலாளர் சஞ்சீவ் கோஷல் கூறியுள்ளார். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மணிப்பூர் அரசு ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது. ஹிமாச்சல் அரசு மணிப்பூரில் சிக்கியுள்ளவர்கள் தொடர்புகொள்ள இரண்டு தொலைபேசி எண்களை (0177 2655988, 9816966635) வழங்கியுள்ளது.
From The India Gate: ஹாசன் பவானியின் எழுச்சியும் சித்தராமையாவை மாற்றிய நிகழ்ச்சியும்