
மாட்டிறைச்சிக்கு தடைக்கு வலுக்கும் எதிர்ப்பு…மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மேகாலயா சட்டப் பேரவையில் தீர்மானம்…
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய தடைவிதித்து அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து கேரள மாநிலத்தைத் தொடர்ந்து மேகாலயா சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த புதிய அரசாணைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வது தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டு மணி நேரம் விவாதத்திற்கு பிறகு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேகாலயா மாநிலத்தில் தான் நாட்டிலேயே அதிக அளவில் மாட்டிறைச்சி நுகர்வு செய்யப்படுகிறது. மாநிலத்தில் சுமார் 80.74 சதவீதம் மக்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள்.
முன்னதாக, மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. கட்சி தலைவர்கள் இருவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.