
நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு புதிதாக ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக இத்திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் , தற்போது தெலுங்கானா ,தமிழ்நாடு , கேரளா என்று பரவியுள்ளது. பீகார், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரயில்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் நாடுமுழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதுவரை 7 ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் 20 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அக்னிபத் வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் வாட்ச்மேன் வேலை..? பாஜக தலைவரின் பேச்சால் வெடித்த சர்ச்சை.!
இதனையடுத்து போராட்டத்தை நிறுத்தி இளைஞர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் 2 முறை முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, அக்னி வீரர்களுக்கு இத்திட்டத்தில் சேருவதற்கான உச்ச வரம்பில் இருந்து 3 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்துறை மற்றும் பாதுக்காப்புத்துறை அமைச்சகத்தில் வேலைகளில் 10 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்த திட்டம் தாமதமானது என்றும் அக்னிபாத் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தத்திட்டத்தை திரும்பப் பெறும்பேச்சுக்கு இடமில்லை என ராணுவத் தளபதிகள் தெரிவித்துள்ளனர். அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளி்ட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால் தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு (Bharath Bandh) முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை கருத்தில் கொண்டு, ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதனால் சென்னை கோட்டத்தில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும், அடுத்த அறிவிப்பு வரும்வரை நடைமேடை டிக்கெட்டுகள் (Platform tickets) வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ரயில்வே சொத்துக்கள் சேதமாவதை தவிர்க்கவும், ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு பயணிகளையும் பொதுமக்களையும் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க்: Bharat Bandh Today:இன்று பாரத் பந்த்: அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அழைப்பு:10 முக்கியத் தகவல்கள்