பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் ஆப்பிரிக்கா செல்லவுள்ள பிரதமர் மோடியை வரவேற்க அந்நாடு தயாராகி வருகிறது
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். இந்த மாநாட்டில் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பர். பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்படும்.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை காலை தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் செல்லவுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகை குறித்து தென்னாப்பிரிக்காவின் முதல் குருத்வாரா சாஹேப்பின் நிறுவன உறுப்பினரும் இயக்குநருமான ஹர்பிந்தர் சிங் சேத்தி கூறுகையில், “பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவிற்கு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். BRICS உச்சிமாநாட்டிற்குப் பிறகு தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையேயான உறவு மேலும் ஆழமடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பெரிய இந்திய நிறுவனங்களை ஆப்பிரிக்காவுக்கு வரவும், அவை உள்ளூர் மக்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்தவும் பிரதமர் மோடி ஊக்குவிக்க வேண்டும். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். இதன் மூலம் இரு நாடுகளும் ஒன்றாக வளர முடியும்.” என தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் ஆயுர்வேத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சஞ்சு திரிபாதி கூறுகையில், “நாங்கள் அனைவரும் பிரதமர் மோடிக்காக காத்திருக்கிறோம். பிரிக்ஸ் நாடுகளை ஆயுர்வேதத்தைப் பயன்படுத்துவதை பிரதமர் மோடி ஊக்குவிக்க வேண்டும். ஆயுர்வேதத்தைப் பற்றி அறிந்தவர்கள் இங்கு வந்து அதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கிறேன்.” என்றார்.
பேராசிரியர் சாய்பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது முட்டாள்தனமான செயல்: ஐ.நா.உரிமைகள் நிபுணர்!
ஸ்ரீ சத்ய சாய் குளோபல் கவுன்சிலின் ஆப்பிரிக்காவின் தலைவர் சூப்ரி நைடூ கூறுகையில், “பிரதமர் மோடி இங்கு வருவதைக் கண்டு நாடு முழுவதும் உள்ள நமது இந்திய சமூகம் மிகவும் உற்சாகமாக உள்ளது. இந்தியாவில் பிரதமர் மோடி செய்த அனைத்து சாதனைகளையும் பிரிக்ஸ் நாடுகளுக்கு அவர் கடத்துவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இதன் மூலம் பிரிக்ஸ் நாடுகள் மேலும் வளரும். அனைத்து நாடுகளையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அவர் உதவ வேண்டும். பிரதமர் மோடி எங்களுக்காக செய்த அனைத்தையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பிரிக்ஸ் மாநாடு காணொலி காட்சி வாயிலாகவே நடைபெற்று வந்த நிலையில், நடப்பாண்டில் நேரடியாக நடைபெறவுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் முதல்முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டிற்கு இடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த சந்திப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆகஸ்ட் 25ஆம் தேதி அரசு முறைப்பயணமாக கிரீஸ் செல்லவுள்ளார்.