
இறந்த பெற்றோரின் நினைவாக, அவர்களின் உருவச்சிலையை அமைத்து கோயில் கட்டி வழிபட்டு வரும் இரண்டு மகன்களின் செயல் தெலங்கானாவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நர்சாபூர் அருகேயுள்ள ருஸ்டம்பேட்டையைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரப்பா மற்றும் அவரது மனைவி பெண்டம்மா. இந்தத் தம்பதியினருக்கு சித்திராமு மற்றும் பஸ்வானந்தம் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் பஸ்வானந்தம் ஹோமியோபதி மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரப்பாவும் பெண்டம்மாவும் காலமான நிலையில், தங்கள் பெற்றோரின் நினைவாக அவர்களின் விவசாய நிலத்திலேயே மகன்கள் இருவரும் ஒரு கோயிலைக் கட்டினர். இந்தக் கோயிலில் பளிங்கு கற்களால் செய்யப்பட்ட பெற்றோரின் உருவச்சிலைகளை வைத்து, தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இது குறித்து மருத்துவர் பஸ்வானந்தம் கூறுகையில், “எங்கள் கிராமத்தின் ராய் ராவ் ஏரி நிரம்பும்போதெல்லாம் எங்கள் விவசாய நிலத்தில் மணல் குவிந்துவிடும். என் தந்தை கடுமையாக உழைத்து அந்த மணலை அகற்றுவார். விவசாயம் செய்து கொண்டே, என்னை மருத்துவம் படிக்க வைத்தார். அவர் வியர்வை சிந்திய இந்த நிலத்தில் பெற்றோருக்குக் கோயில் கட்டியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று தெரிவித்தார். இறந்த பிறகும் பெற்றோரை போற்றி வழிபடும் இந்தச் செயல், அப்பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.