காங்கிரஸை நிதி ரீதியாக முடக்கும் பிரதமர் மோடி: சோனியா காந்தி குற்றச்சாட்டு!

By Manikanda PrabuFirst Published Mar 21, 2024, 2:31 PM IST
Highlights

காங்கிரஸை நிதி ரீதியாக முடக்குவதற்கு பிரதமர் மோடி திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அஜய் மக்கான், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அப்போது உடனிருந்தனர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அழித்துவிட்டது. சுமார் 30 ஆண்டுகள் பழமையான புகாரில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலா? என கேள்வி எழுப்பினார். 14 லட்ச ரூபாய் வருமானவரி பிரச்சனைக்காக காங்கிரஸின் ஒட்டுமொத்த நிதி ஆதாரமும் முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நடத்தும் கிரிமினல் நடவடிக்கை இது எனவும் கார்கே குற்றம் சாட்டினார்.

“உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு வெளியான தேர்தல் பத்திரத் தகவல்கள் வெட்கக்கேடானது மற்றும் கவலையளிக்கிறது. இப்போது, பாரபட்சமற்ற தேர்தல் குறித்து கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் ஆளும் கட்சி பல ஆயிரம் கோடிகளை குவித்துள்ளது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் எனவும் கார்கே அப்போது வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, பாஜகவின் தேர்தல் நன்கொடை பத்திர முறைகேட்டால் உலக அளவில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்றார். “தேர்தல் பத்திரத்தின் வழி பணக்குவியலை அள்ளியிருக்கும் மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் பணியாற்ற விடாமல் தடுக்கிறது. இது இந்திய  ஜனநாயகத்திற்கே ஆபத்தானது.” என சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

மீண்டும் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தை களமிறக்கிய திமுக தலைமை.. பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!

காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கினால் எப்படி தேர்தலில் செலவிடுவது என கேள்வி எழுப்பிய சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றார். தேர்தல் பத்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்தியுள்ளது. பாஜகவின் இந்த நடவடிக்கை இந்திய இறையாண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

இத்தகைய சவாலான சூழ்நிலையில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், எங்களின் தேர்தல் பிரச்சாரத்தை நடத்த எங்களால் முடிந்த அளவில் முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் இன்று ஜனநாயகம் இல்லை என்றார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற கருத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கூறினார்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் உள்ளதாக தெரிவித்த ராகுல் காந்தி, இந்த தேர்தலில் எங்கள் கட்சியினருக்கு 2 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை என்றார். எங்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு, இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

“காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. எங்களால் பிரசாரத்துக்கு செலவு செய்ய முடியவில்லை. ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் எங்களால் விளம்பரம் செய்ய முடியவில்லை. எங்கள் தலைவர்கள் விமானத்திலோ, ரயிலிலோ செல்ல முடியவில்லை. இத்தனையும் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு நடக்கிறது. இது காங்கிரஸ் கட்சியை முடக்க பிரதமர் மோடி செய்யும் கிரிமினல் செயல்.” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

click me!