ஆந்திராவில் ரூ.176 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஆந்திராவில் ரூ.176 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ரூ.176 கோடி மதிப்புள்ள ரொக்கம், விலைமதிப்பற்ற உலோகங்கள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Loksabha election 2024 நீலகிரி தொகுதியில் கள நிலவரம் எப்படி? அதிமுக - திமுக நேரடி போட்டி!
பறிமுதல் செய்யப்பட்டதில் ரொக்கம் ரூ.78 கோடி, ரூ.41 கோடி மதிப்புள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள், ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் ஆகியவை அடங்கும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.3.39 கோடி மதிப்புள்ள பணம், மது, போதைப்பொருள் மற்றும் இலவசப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதில், ரூ.1.6 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.80 லட்சம் ரொக்கமும் அடங்கும்.
இதேபோல், சொத்துக்களை சேதப்படுத்தியதற்கு எதிராக 94 வழக்குகளும், வாகனங்களை தவறாக பயன்படுத்துதல், ஒலிபெருக்கிகள் விதிகளை மீறுதல், சட்டவிரோத கூட்டங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பான 37 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்டஹி விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, கடந்த மூன்று நாட்களில் மட்டும் 385 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்