
Sonia Gandhi Hospitalized : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை வயிற்று தொடர்பான பிரச்சினைகளால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. ராஜ்யசபா எம்.பி.யான அவர் மருத்துவமனையின் காஸ்ட்ரோ பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஜூன் 7 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காந்தி அனுமதிக்கப்பட்டார்.
சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக சிபிபி தலைவர் அழைத்து வரப்பட்டதாக இமாச்சலப் பிரதேச முதலமைச்சரின் முதன்மை ஆலோசகர் (ஊடகம்) நரேஷ் சௌகான் தெரிவித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதத்திலும் வயிறு வலி காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் வயிற்று வலி பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மருத்துவர்கள் சோனியா காந்தியின் உடல்நிலையைப் பரிசோதித்து, அவர் உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
சோனியா காந்திக்கு தற்போது 78 வயதாகிறது. 1999 ஆம் ஆண்டுமுதல் எம்பியாக உள்ளார். 2000ஆம் ஆண்டில் மக்களவை எதிர்கட்சி தலைவராகவும் சோனியா காந்தி இருந்துள்ளார். தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.