காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ரேபரேலி எம்.பி.யுமான சோனியா காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் அவர் தொடர் சிகிச்சைகளை எடுத்து வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாகவே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய அவர், பெரும்பாலும் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தி சிறிது காலமாக மார்பு தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தற்போது 76 வயதாகும் சோனியா காந்தி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மகனும் எம்.பி.யுமான ராகுல் காந்தியுடன் காஷ்மீருக்கு சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பிய அவர், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மும்பையில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநிலங்களின் ஒப்புதல் தேவையா?
அதன் தொடர்ச்சியாக, வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து கூடிய விரைவில் அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.