
குடியரசு தலைவர் தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் – மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியும் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
பொது வேட்பாளர்?
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலையில் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
பாஜக மீது புகார்
இந்த ஆலோசனை சோனியாவின் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் உடன் இருந்தார்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மம்தா பானர்ஜி கூறியதாவது:- ஜனநாயக நாட்டில் மத்திய புலனாய்வுக் குழுவை (சிபிஐ-யை) பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் மீது பொய்யான வழக்குகளை போட்டு சிறைக்குள் தள்ளக் கூடாது. ஆனால் அதனை பாஜக செய்து கொண்டிருக்கிறது. குடியரசு தலைவர் தேர்தல் குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும். நாட்டிற்காக உழைக்கக் கூடிய சிறந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.