
சட்ட விரோதமாக ரூ. ஆயிரம் கோடி வந்துள்ளது சி.பி.ஐ இணை இயக்குநர் வினீத் வினாயக் விளக்கம்…சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் ரெய்டு விவகாரம்…
ஐ.என்.எக்ஸ். ஊடக நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்த வகையில் சட்டவிரோதமாக ரூ. ஆயிரம் கோடி வந்துள்ளது. தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகிறோம் என்று சி.பி.ஐ. இணை இயக்குநர் வினீத் வினாயக் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. நேற்று இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
இதில், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் அவரின் நிறுவனம் செஸ் மேனேஜ்மென்ட், உள்ளிட்ட நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது பத்மா விஸ்வநாதன் நடத்தும் நிறுவனங்கன் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த சூழ்நிலையில், சென்னையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதுதவிர மும்பை, டெல்லி, குருகிராமம் பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை குறித்து டெல்லியில் சி.பி.ஐ. இணை இயக்குனர் வினித் விநாயக் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது-
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், மின் அஞ்சல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகிறோம்.
கூட்டுச்சதி, அரசு அதிகாரியை சட்டவிரோதமாக பயன்படுத்துதல், மோசடி, அரசு பதவியை 5 தனிநபர்கள், நிறுவனங்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்னிய முதலீடு மேலாண்மை வாரியத்தின் அதிகாரிகள், ஐ.என்.எக்ஸ் இயக்குநர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர்முகர்ஜி ஆகியோர் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போதுமான முகாந்திர ஆதாரங்கள் இருந்ததன் காரணமாகவே 14 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடத்தினோம். தொடர்ந்து புலன்விசாரணை செய்து வருகிறோம். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்துவோம்.
மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த 3 நிறுவனங்களிடம் இருந்து ரூ.4.6 கோடி முதலீட்டை கொண்டுவர கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருக்கும் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் உதவியது. மேலும், அதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடமும் ஒப்புதல் பெற்றுக்கொடுத்தது. 46.2 சதவீத பங்குகளை அந்த நிறுவனத்துக்கு கொடுத்த நிலையில், 26 சதவீதமாக குறைத்துக்காட்டி இந்த ஒப்புதல் பெறப்பட்டது
இது தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு வருமான வரித்துறையினருக்கு புகார் சென்றுள்ளது. அந்த புகாரில் ரூ.4.6 கோடிக்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்தாலும, சட்டவிரோதமாக ரூ. ஆயிரம் கோடி கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த சேவைக்காக செஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் ரூ.10 லட்சம் வரை லஞ்சமாக பெற்றுள்ளது.
செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனமும் தனது அறிக்கையை அன்னிய முதலீடு மேம்பாட்டு நிறுவனத்திடம் அளித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. அமைப்பின் பொருளாதார பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.