பனியால் உறைந்த வட மாநிலங்கள்…!! சாலைகள்,மின்சாரம் துண்டிப்பு...

First Published Jan 7, 2017, 11:38 AM IST
Highlights


இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனி வாட்டி வருகிறது. உறைபனி கொட்டுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதேபோல், இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக காணப்படும் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் சிம்லா பனிப்பிரதேசமாக காட்சி அளிக்கிறது. இதேபோல், இன்றும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிம்லா, குஃப்ரி, நார்கன்டா, மஷோப்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் சாலைகள் மூடப்பட்டன. மேலும், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வானிலை மாற்றத்தால் டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் அனைத்தும் தாமதமாகியுள்ளன.

மேலும் ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 4 உள்நாட்டு விமானங்கள் சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதேபோல், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நேற்றிரவு பனிக்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து சேவையும் முடங்கி காணப்பட்டது.

 

tags
click me!