
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நாளை பா.ஜ.க.வில் இணையவுள்ளார். டெல்லியில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜக-வில் இணைய உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் நஞ்சங்கோடு மற்றும் குண்டல்பெட் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவிட்டு மைசூர் திரும்பிய கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் எஸ்,எம்.கிருஷ்ணா, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் நாளை பாஜக-வில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
84 வயதாகும் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த ஜனவரி 29-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மாநிலத்தில் நிகழ்ந்த குழப்பம் காரணமாக கட்சியில் இருந்து விலகியதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கர்நாடகாவில் 1999 முதல் 2004 வரை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது, எஸ்.எம். கிருஷ்ணா முதலமைச்சராக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சராகவும், அதன் பின்னர் மகாராஷ்டிர மாநிலத்திற்கு ஆளுநராகவும் இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது