
உ.பி. தேர்தலில் பா.ஜனதாவின் சுனாமி அலையில் அந்த மாநிலத்தின் மூன்றில் இரண்டு பகுதி அமைச்சர்கள் தோல்வியை தழுவினார்கள்.
சபாநாயகரும் தோல்வி
அமைச்சர்கள் மட்டுமின்றி, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், சபாநாயகருமான மாதா பிரசாத் பாண்டேயும் தனது பாரம்பரிய இத்வா தொகுதியில் பா.ஜனதாவிடம் வீழ்ந்தார். அவருக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்து இருந்தது.
அமைச்சரவையில் அகிலேஷுடன் நெருக்கமாக இருந்த அரவிந்த்சிங் கோபே ராம்நகர் தொகுதியிலும், அபிஷேக் மிஸ்ரா லக்னோ வடக்கு தொகுதியிலும் தோல்வி அடைந்தனர்.
கற்பழிப்பு வழக்கில்..
ஊழல் மற்றும் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் காயத்ரி பிரஜாபதி அமேதி தொகுதியில் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்தார். தேர்தலுக்கு முன்பு அவருக்கு எதிராக ஜாமீனில் விடுவிக்க முடியாத குற்றப் பிரிவின் கீழ் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் அவர் சில நாட்கள் தலைமறைவாக இருந்து வந்தார்.
சுரங்கத்துறை அமைச்சராக அவர் பதவி வகித்து வந்த நிலையில், சட்ட விரோத சுரங்க முறைகேடு புகாரில் சி.பி.ஐ. விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
31 அமைச்சர்கள்
மொத்தம் 31 அமைச்சர்கள் (மொத்த அமைச்சர்களில் மூன்றில் இரண்டு பங்கு) தோல்வி அடைந்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய அமைச்சர் ஆசம்கான் ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதும், அவருடைய மகன் அப்துல்லா ஆசமும் சுவார் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.