
சேலம் மாவட்டம் சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் முத்து கிருஷ்ணன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
வரலாற்றுப் பிரிவில் படித்து வந்த முத்துகிருஷ்ணன், நேற்று மதியம் சாப்பிட்டு முடித்ததும், அவரது நண்பர் வீட்டில் தூங்க சென்றார். பின்னர், அவர் எழவில்லை. இதனால், சந்தேகமடைந்த நண்பர், அவரை எழுப்பியபோது, சடலமாக கிடந்தார்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முத்துகிருஷ்ணனின் மர்மச்சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மாணவனின் மர்மச்சாவு சம்பவத்தால், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர் முத்து கிருஷ்ணன் தலித் இனத்தை சேர்ந்தவர் ஆவார். இதையொட்டி அவர், கல்லூரியில் நடந்த பல்வேறு தலித் சார்ந்த போராட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் முத்து கிருஷ்ணன் இறந்தது குறித்து, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜீவானந்தம் கூறுகையில், நேற்று மாலை முத்துகிருஷ்ணன் வழக்கம் போல செல்போனில் எங்களுடன் பேசினான். எங்களது மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். அதில், உண்மை இல்லை. அவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை கிடையாது.
எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவன் கோழையும் கிடையாது. அவரது சாவில் மர்மம் இருக்கிறது. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும். அதுவரை சடலத்தை நாங்கள் வாங்க மாட்டோம்.
அதேபோல் இறந்த எனது மகன் முத்து கிருஷ்ணன் உடலை, பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ படம் எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில், சேலத்தில் நான்கு ரோடு பகுதியில் முத்துகிருஷ்ணனின் உறவினர்கள், மற்றும் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.