
விவசாயிகளையும், சட்டப்பேரவையையும் அவதூறாகப் பேசிய ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் நோட்டீஸ் அளித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, “ விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தால், கடன் பெறும் ஒழுக்கம் கெட்டுவிடும்.
அதன்பின் கடன் பெறும் விவசாயிகள் எப்போது கடன் தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்து இருப்பார்கள், கடனைக் கட்டமாட்டார்கள். இதனால், எதிர்காலத்தில் கடன் கொடுத்தாலும் அது திரும்பி வராமல் இருக்கும்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் நேற்று சட்டப்பேரவையில் எழுப்பினார்கள். அப்போது, காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராதா கிருஷ்ண விகே பாட்டீல், ஸ்டேட் வங்கி தலைவர் பேச்சு தொடர்பாக உரிமை மீறல் நோட்டீசை சபாநாயகர் ஹரிபாபுபாக்தேயிடம் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ பட்டாச்சார்யா பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை. அவரின் பேச்சு, விவசாயிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும், இந்த அவையையும் அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது.
பட்டாச்சாயார் ஒன்றும் கொள்கைகளை வகுப்பவர் அல்ல. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யக்கூடாது என்ற முடிவை எடுக்க அவருக்கு அதிகாரமில்லை. இதுபோன்ற கருத்துக்களை கூற அவருக்கு உரிமையும் இல்லை. பட்டாச்சார்யாவின் கருத்து, சபையின் உரிமைகளை மீறும் செயலாகும்'' என்றார்.