
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடக்கும் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
காங். படுதோல்வி
உத்தரகாண்டில் நடந்த 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில்பாரதிய ஜனதா கட்சி 57 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசால் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
குறிப்பாக சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 16 ஆண்டுகால உத்தரகாண்ட் வரலாற்றில், தனிக்கட்சி ஒன்று அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அமைப்பது இதுவே முதன் முறையாகும்.
ஆலோசனை
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் யாரை முதல்வராக நியமிப்பது எனப்து குறித்து பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக்குழு கடந்த வாரம் ஆலோசித்தது.
ஆர்.எஸ்.எஸ்.
அதன்பின் எடுக்கப்பட்ட முடிவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கடந்த 1983 முதல் 2002 வரை தீவிரமாக இருந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்தவருமானதிரிவேந்திர சிங் ராவத்தை முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
57 வயதான திரிவேந்திர சிங் ராவத், டோய்வாலா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹிரா சிங் பிசித்தை எதிர்த்து போட்டியிட்டு, 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் திரிவேந்திர சிங் ராவத் பெறும் 3-வது வெற்றியாகும்.
மக்களவைத் தேர்தல்
இவர் கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டதால்,பாரதிய ஜனதா கட்சி 72 இடங்களைக் கைப்பற்றியது. மேலும், ஜார்கண்ட்மாநில, பா.ஜனதா பொறுப்பாளராக இருந்து, சட்டசபைத் தேர்தலில்திரிவேந்திர சிங் பணியாற்றினார். அதிலும், பாரதிய ஜனதா கட்சி சிறப்பான வெற்றி பெற்றது.
முதல்வராக அறிவிப்பு
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சி 70 இடங்களில் 57 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து திரிவேந்திர சிங் ராவத் ஒருமனதாக முதல்வராக தேர்வு செய்து கட்சித் தலைமை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம், எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துக் கொண்டு, திரிவேந்திர சிங் ராவத் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து ஆட்சி அமைக்க நேற்று உரிமை கோரினார். ஆளுநர் கே.கே.பாலை ஒப்புதல் அளித்ததையடுத்து, இன்று பதவி ஏற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத்தலைவர் அமித்ஷா உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.கள் பங்கேற்கின்றனர்.