
நடிகை தீபிகா படுகோனுக்கு ஆதரவாக நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் ஆதரவு தெரிவித்து டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி திரைப்படம் வரும் 1-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பத்மாவதி படம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பாஜக, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்
என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதையடுத்து தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
பத்மாவதி திரைப்படத்தை மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், குஜராத், அரியனா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. பத்மாவதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் படத்தை திரையிடமாட்டோம் என்று மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், படத்தில் நடித்த தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பத்மாவதி பட பிரச்சனையில் தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பிரச்சனைகள் என்னுடைய படங்களுக்கும் எழுந்தது என்றும் என்றும் கூறியுள்ளார். உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அதுபோல் திரைப்படத்துக்கு கருத்து
சுதந்திரம் முக்கியம் என்றும் அதில் பதிவிட்டிருந்தார்.
நடிகை தீபிகா படுகோனுக்கு ஆதரவாக டுவிட்டரில் கமல் பதிவிட்டுள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார். மிரட்டல் விடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரியானா முதலமைச்சர் கட்டாருக்கு டுவிட்டரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். தீபிகாவின் குடும்பத்தார் பெங்களூருவில் இருக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.