ஹேமந்த் சோரனின் மனைவியை முதல்வராக்குவதற்கு அவரது அண்ணி சீதா சோரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அம்மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அவரது மனைவி கல்பனா சோரன் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஹேமந்த் சோரன் தலைமையில் ராஞ்சியில் நடந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவரது மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் ஹேமந்த் சோரன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், அரசியல் ரீதியாக ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அதனை சமாளிக்கும் பொருட்டு, எம்.எல்.ஏ.க்களிடம் ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹேமந்த் சோரனின் 1300 கி.மீ கார் பயணம்: யார் கண்ணிலும் சிக்காமல் எப்படி ஜார்கண்ட் வந்தார்?
இந்த நிலையில், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனை முதல்வராக்குவதற்கு ஷிபு சோரனின் மருமகளும், மறைந்த துர்கா சோரனின் (ஹேமந்த் சோரனின் சகோதரர்) மனைவியுமான சீதா சோரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஜமா சட்டமன்ற தொகுதியின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ.வுமான சீதா சோரன், நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை எதிர்க்கவில்லை; கட்சியின் ஒற்றுமையை எப்போதும் ஆதரிக்கிறேன்; ஆனால், கல்பனா சோரனை முதலமைச்சராக்கும் முடிவை எதிர்ப்பேன் என சீதா சோரன் தெரிவித்துள்ளார். மேலும், ஷிபு சோரனுடன் இணைந்து தனது கணவர் கட்சிக்கு நிறைய பங்களித்துள்ளதாகவும், தனது கணவரின் மறைவுக்குப் பிறகு, கட்சிக்காக தானும் நிறைய தியாகம் செய்ததாகவும் அவர் கூறினார்.
ஜார்கண்டின் அடுத்த முதல்வர்? யார் இந்த கல்பனா சோரன்?
“ஹேமந்த் சோரனை முதலமைச்சராக்கும் முடிவை நான் ஏற்றுக்கொண்டேன், ஆனால் கல்பனா சோரனை எந்த வகையிலும் ஏற்க மாட்டேன்.” என அவர் கூறியதாக கூறப்படுகிறது. தான் அரசியலில் இருந்திருக்காவிட்டால், தனது உரிமைகளுக்காக போராடியிருக்க முடியாது எனவும், 2019 தேர்தலுக்குப் பிறகு சில வெகுமதிகளை எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வளர்ந்து விட்ட தனது இரண்டு மகள்களையும் ஹேமந்த் சோரன் கண்டு கொள்வதில்லை எனவும் சீதா சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேசமயம், கல்பனா சோரனை முதல்வராக்குவதிலும் சட்ட சிக்கல் உள்ளதாக கூறுகிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்திற்கு வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் பட்சத்தில் எதாவது சட்டமன்ற தொகுதி காலியானால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது கிடையாது. கல்பனா சோரன் தற்போது எம்.எல்.ஏ.வும் கிடையாது. எனவே, அவரை முதல்வராக்கினால் அதன்பிறகு எம்.எல்.ஏ. ஆக்குவது கடினம். இத்தகைய சட்டசிக்கல் குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஹேமந்த் சோரன் அலோசித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.