விசாரணையின்போது, பிடிபட்ட புறா தைவானில் பந்தயத்தில் ஈடுபடுத்தப்படும் புறா என்று போலீசார் கண்டுபிடித்தனர். ஒரு பந்தயத்தின்போது அந்தப் புறா பறந்து இந்தியாவிற்கு வந்திருக்கிறது என்றும் போலீசார் கூறுகின்றனர்.
சீனா இந்தியாவை உளவு பார்க்க பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் புறா ஒன்று பிடிபட்டது. கால்நடை மருத்துவமனையில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக அந்தப் புறா எட்டு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது என புதன்கிழமை மும்பை காவல்துறை கூறியுள்ளது.
மும்பையில் உள்ள பரேல் பகுதியில் உள்ள விலங்குகளுக்கான பாய் சகர்பாய் மருத்துவமனை திங்கள்கிழமை பறவையை விடுவிக்க காவல்துறையின் அனுமதியைக் கோரியது. அதைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை புறா விடுவிக்கப்பட்டது என்று மும்பையின் ஆர்சிஎஃப் காவல் நிலைய அதிகாரி தெரிவிக்கிறார்.
புறநகர் பகுதியான செம்பூரில் உள்ள பிர் பாவ் ஜெட்டியில் கடந்த ஆண்டு மே மாதம் இந்தப் புறா பிடிபட்டது.
புறாவிற்கு இரண்டு மோதிரங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று தாமிரம் மற்றும் மற்றொன்று அலுமினியத்தால் ஆனவை. புறாவின் இரண்டு இறக்கைகளின் கீழ் பக்கத்திலும் சீன எழுத்துக்களில் எழுதப்பட்ட செய்திகள் இருந்தன. இது தொடர்பாக ஆர்சிஎஃப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் உளவுக் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, பிடிபட்ட புறா தைவானில் பந்தயத்தில் ஈடுபடுத்தப்படும் புறா என்று போலீசார் கண்டுபிடித்தனர். ஒரு பந்தயத்தின்போது அந்தப் புறா பறந்து இந்தியாவிற்கு வந்திருக்கிறது என்றும் போலீசார் கூறுகின்றனர்.
மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று, புறாவை விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று போலீசார் கூறியதை அடுத்து, புறா விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்டபோது பறவையின் உடல்நிலை நன்றாக இருந்தது என்றும் மும்பை போலீசார் கூறுகின்றனர்.