
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் அதிகபட்ச டிக்கெட் விலையாக ரூ.200க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்று மாநிலஅரசு நேற்று திடீரென அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகுபலி -2 படம் பார்க்க ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தியும் டிக்கெட் கிடைக்காமல் ஒரு கூட்டம் அலைமோதிக்கொண்டு இருக்க, மறுபுறம் டிக்கெட் விலை குறையட்டும் என காத்திருக்கும் மக்கள் இருக்கும் போது, இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இனி கர்நாடக மாநிலத்தில் மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையங்குகளிலும் ஓடிக்கொண்டு இருக்கும் பாகுபலி-2க்கான டிக்கெட் ரூ.200 மட்டுமேதான்.
பாகுபலி-2 படத்தை தெலுங்கில் முதல்வர் சித்தராமையை திங்கள்கிழமை பார்த்துவிட்டு, செவ்வாய்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து மாநில அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது-
கர்நாடக மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையங்குகளிலும் டிக்கெட்டின் அதிகபட்ச விலை ரூ.200க்கு மேல் நிர்ணயம் செய்யக்கூடாது. ஒவ்வொரு தியேட்டரிலும் 10 சதவீதம் இடத்தை மட்டுமே அதிகபட்ச விலையாக வி.ஐ.பி.களுக்காக கோல்டு கிளாக் பிரிவில்விற்பனை செய்து கொள்ள அனுமதி உண்டு. மற்ற 90 சதவீத டிக்கெட்டுகளை அரசு நிர்ணயித்த விலையில்தான் விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், ஐமாக்ஸ், 4டிஎக்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட திரையரங்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. ஏனென்றால், அந்த திரையரங்குகள் அதிகபட்ச முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளதால், அரசின் இந்த உத்தரவில் இருந்து அவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் இது குறித்த அறிவித்து இருந்த முதல்வர் சித்தராமையா, இப்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், 2018ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருவதையொட்டி, சமானிய மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து இந்த டிக்கெட் விலை கட்டணக் கொள்ளைக்கு காங்கிரஸ் அரசு செக் வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
மல்டிபிளக்ஸ் திரையங்குகளில் ஏராளமான பணம் கொடுத்து திரைப்படம் பார்த்து வந்த சமானிய மக்களுக்கு, அரசின் இந்த உத்தரவு ஓரளவுக்கு நிம்மதியையும், பாக்கெட்டில் இருந்து காசு பிடுங்குவதையும் தடுத்துள்ளது.